துரை.நாகராஜன் எழுத்தாக்கத்தில் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 22 கதைகள், மகாபாரதம், ராமாயணம் ஆகிய இருபெரும் காவியங்களில் இடம்பெற்றுள்ள 21 பெண்களின் வாழ்க்கையை முற்றிலும் மீள் வரைவு செய்திருக்கின்றன. மாதவி ஏன் துறவியானாள் என்பதை எடுத்துக்காட்டும் ஒரு கதைக்கு மட்டும் பௌத்தப் பெருங்காப்பியமான மணிமேகலையை நாடித் தேர்ந்துகொண்டிருக்கிறார் இந்நூலாசிரியர். ஒவ்வொரு கதையிலும் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களின் உள்ளக் குமுறலை ஊடுருவிப் பார்க்கும் எழுத்தாளரின் முயற்சி அழகான மொழியில் வெளிப்பட்டிருக்கிறது. எதனால் அகலிகை கல்லானாள், எதற்காக அம்பை சிகண்டி ஆனாள் என்பதை அறிந்துகொள்ள ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் நீங்கள் ஆற அமர வாசிக்க வேண்டும். குறைந்தபட்சம் அக்கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ள படலங்களையாவது வாசிக்க வேண்டும். அதற்கான உழைப்பை நூலாசிரியர் தன்வசம் எடுத்துக்கொண்டிருக்கிறார். 21கதாபாத்திரங்கள் தோன்றும் படலங்களை 500 வார்த்தைகளுக்குள், கச்சிதமான வடிவத்தில் அடக்கிவிட்டாரே என்று ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்.