புதுமைகள் படைக்க உதவும் பேராயுதம் சமூகத்தில் பல தரப்பு மக்களுடனும் தொடர்ச்சியாக ஆழ்ந்த உரையாடலை நிகழ்த்தக் கூடிய திறன் பெற்றிருப்பவர்கள், வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெறுகிறார்கள். இத்தகைய திறன் பெற்றோர் எந்தத் துறையிலும் வெற்றி பெற முடியும். இத்தகைய உரையாடல் திறன் ஒருவருக்கு இருக்க வேண்டுமானால், அவரிடம் கேள்வி கேட்கும் திறன் அவசியம் இருக்க வேண்டும். அதுவும் தேர்ந்தெடுத்த, நல்ல கேள்விகளைக் கேட்கும் திறன் இருப்பது கூடுதல் பலனைத் தரும்.
கேள்விக்குப் பதில் கூறப் பலரால் முடியும். ஆனால், பதில்களிலிருந்து புதிய கேள்விகளை எழுப்பச் சிலரால் மட்டுமே முடியும். ஆக, மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில்களை மட்டும் சொல்லிக் கொண்டிருக்காமல், அந்தப் பதில்களிலிருந்து புதிது புதிதாகக் கேள்விகளை எழுப்பும் திறனை சிறு வயதிலிருந்தே வளர்த்துக் கொள்ள வேண்டும்.
சிறு குழந்தைகள் பேசத் தொடங்கிய புதிதில் கேள்வி மேல் கேள்விகளாகக் கேட்டுக் கொண்டேயிருப்பார்கள். குழந்தைகள், ஒரு நாளைக்கு சராசரியாக 300 கேள்விகள் கேட்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்கள் பெரியவர்கள் ஆகும்போது, கேள்விகள் கேட்பது படிப்படியாகக் குறைந்து விடுகிறது. அதனால் அவர்களின் கற்றல் திறனும் குறைகிறது.
கேள்விகள் கேட்கும்போது, பல சிக்கலான விசயங்களில் கூட நமக்கு தெளிவான புரிதல் கிடைக்கிறது. நல்ல தீர்வுகளை நோக்கிச் செல்ல புதிய கண்ணோட்டம் பிறக்கிறது. ஒரு விசயத்தை நாம் ஒருவிதமாகப் புரிந்து வைத்திருப்போம். நம்மைச் சுற்றியுள்ளவர்கள் அது பற்றி என்னக் கருத்து வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டுமானால், கேள்விகளை எழுப்பி, அவர்களுடன் உரையாடல் செய்வது அவசியம். அதன் மூலம் வலுவான விவாதங்கள் நடைபெறவும், விவாதத்தின் பயனாக ஆகச் சிறந்த முடிவை எட்டவும் முடியும். கேள்விகளும், உரையாடல்களும், விவாதங்களும் புதுமையான தீர்வுகளைக் கிடைக்கச் செய்கின்றன; விமர்சனச் சிந்தனைகளை வளர்க்கின்றன; பகுப்பாய்வுத் திறனை மேம்படுத்துகின்றன.