‘நோயற்ற வாழ்வுக்கு உடல் ஆரோக்கியம் மட்டும் போதாது’ என்ற உண்மையை உரைத்த சித்தர்கள், ‘உடல் ஆரோக்கியத்தோடு, மன ஆரோக்கியத்தையும் சேர்த்து பராமரிப்பதன் மூலமே நோயற்ற வாழ்வு வாழ முடியும்’ என வலியுறுத்தினார்கள். இந்நூலில் நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பது போல, 4,448 நோய்கள் பற்றியும், அவற்றில் தீரும் நோய்கள், தீரா நோய்கள் பற்றியும், அந்த நோய்களை நீக்குவதற்கான மருத்துவம் பற்றியும் நம் சித்தர்கள் மிக விரிவாக விளக்கியிருக்கிறார்கள்.
உலகமே வியந்து பார்க்கும், தமிழர்களின் மிக உன்னதமான சித்த மருத்துவம் பற்றி தமிழில் எத்தனையோ நூல்கள் வந்திருக்கின்றன. சித்த மருத்துவ அறிஞர் டாக்டர் ஒய்.ஆர். மானெக் ஷா எழுதியுள்ள ‘சித்தமிருக்க பயமேன்’ என்ற இந்நூல், பல அம்சங்களில் மற்ற சித்த நூல்களில் இருந்து தனித்து நிற்கிறது. குறிப்பாக, நோயை விளக்குவதிலும், நோய்க்கான மருத்துவத்தை புரிய வைப்பதிலும், இந்நூல் நெடுகிலும் அறிவியல் கண்ணோட்டம் நிறைந்து இருப்பதைக் காண முடிகிறது. “சித்த மருத்துவம் என்பது, விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் கலந்த கலவை” என்கிறார் நூலாசிரியர்.