சிவனருளால் உயிர்கள், பல பிறவி எடுத்து பக்குவம் அடைந்து, மெய்ஞானத்தை உணர்ந்து வீடுபேற்றை அடைகின்றன. இறைவன் மீது மாறாத அன்பு செலுத்தி, பக்தியுடன் அவனை வணங்கி, முக்தி பெற வேண்டும். அவ்வாறு இறைவனை வழிபட்டு, அவனது திருவருள் பெற்ற சிவனடியார்களின் வாழ்க்கை வரலாறு, நமக்கு வழிகாட்டியாக உள்ளது.
திருத்தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்றை, சேக்கிழார் பெருமான் ‘திருத்தொண்டர் புராணம்’ என்ற தலைப்பில் தொகுத்தளித்துள்ளார். திருத்தொண்டத் தொகை என்ற நூலை எழுதிய சுந்தரமூர்த்தி நாயனார், சிவபெருமானின் தோழராகவே அறியப்படுகிறார். ஒருசமயம் திருவாரூர் கோயிலில் சிவபெருமானுடன் சுந்தரமூர்த்தி சுவாமிகள் உரையாடிக் கொண்டிருந்தபோது, தேவாசிரியன் மண்டபத்தில் சிவனடியார்கள் பலர் வருகை புரிந்தனர். அவர்கள் குறித்து சுந்தரர், ஈசனிடம் வினவ, சிவபெருமானும் அவர்களது பெருமைகளை எடுத்துரைக்கிறார்.
திருத்தொண்டர்கள் குறித்து பாடுமாறு சுந்தரரைப் பணித்த சிவபெருமான், அவருக்கு ‘தில்லை வாழ் அந்தணர்’ என்று அடியெடுத்துக் கொடுக்கிறார். சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய திருத்தொண்டத் தொகை நூல், பதினோரு பாடல்களைக் கொண்டு அமைந்துள்ளது. இதில் 58 ஆண் அடியார்கள், காரைக்கால் அம்மையார், மங்கையர்க்கரசி ஆகிய 2 பெண் அடியார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூலை மூலமாகக் கொண்டு, பல இடங்களில் காணப்படும் கல்வெட்டுகள், செவிவழி செய்திகள் ஆகியவற்றை இணைத்து, சேக்கிழார் பெருமான், திருத்தொண்டர் புராணம் என்று அழைக்கப்படும் பெரிய புராணத்தை இயற்றினார். சுந்தரமூர்த்தி நாயனார், அவரது தந்தை சடையனார், தாய் இசைஞானியார் ஆகியோரையும் சேர்த்து 63 சிவனடியார்கள் (நாயன்மார்கள்) குறித்து சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் கூறியுள்ளார்.