தீபாவளி குறித்த நினைவுகள் மட்டுமல்லாமல் முழுமையான சித்திரத்தை வழங்கும் வகையில் எழுத்தாளர் பாரததேவியின் கைப்பக்குவத்தில் தித்திக்கும் தீபாவளி பலகாரங்கள் குறித்த கட்டுரை, ஏக்நாத்தின் பால்ய கால தீபாவளி நினைவுகள், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் தீபாவளிக்குப் பட்டாசு உண்டா என விவரிக்கும் கார்குழலியின் கட்டுரை ஆகியவற்றுடன் நெய்தல் மக்கள், தீக்காயப் பிரிவு மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களின் விடுப்பு எடுக்க முடியாத தீபாவளி அனுபவங்கள் புதிய பார்வையைத் தரும்.
தமிழ்நாட்டில் கடந்த நூற்றாண்டின் இசை அடையாளமாகிவிட்ட இளையராஜா குறித்து ஓவியர் சந்தோஷ் நாராயணன் வடித்த மாறுபட்ட ஓவியங்கள் சினிமா பகுதியில் தனித்து மிளிர்கின்றன. பாட்டுக்காகப் படங்களா, படங்களுக்காகப் பாட்டா என்பது குறித்து தயாளன், திரைப்படங்களில் பாடல்கள் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சி குறித்து பி.ஜி.எஸ்.மணியன், மூன்று தசாப்தங்களில் கோலோச்சிய மூன்று இசை சகாப்தங்கள் குறித்து வெ.சந்திரமோகன், தேவாவின் பாடல்கள் வழியாக சென்னையின் தரிசனம் குறித்து ஆர்.ஜெயகுமார் ஆகியோர் எழுதியுள்ளனர். அத்துடன், நூற்றாண்டு காணும் திருவாரூர் தங்கராசு, சமீப கால நம்பிக்கை நாயகன் சூரி குறித்த கட்டுரைகள், திரைத்துறையில் தனி முத்திரை பதிக்கும் இளையோர், டிரெண்டிங் குரல்களுக்குச் சொந்தக்காரர்கள் குறித்த சொற்சித்திரங்களும் இடம்பெற்றுள்ளன.
இலக்கியப் பகுதியில் பிரபல எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், என்.ஸ்ரீராம், கரன் கார்க்கி, சு.தமிழ்ச்செல்வி, வாசு முருகவேல் ஆகியோர் எழுதி விரைவில் வெளிவரவிருக்கும் புதிய நாவல்களில் இருந்து சில பகுதிகள் தேர்ந்தெடுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் பரவலாக அறியப்பட்ட உதயசங்கர், கமலாலயன், லட்சுமி பாலகிருஷ்ணன் ஆகியோரின் கதைகளும் நான்கு கவிஞர்களின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.
பூடான், இத்தாலி, ரியூனியன் தீவு, கேரளத்தின் வாகமன், ஏவிஎம் நிறுவனத்தின் வரலாற்றைச் சொல்லும் அருங்காட்சியகம் எனக் கண்கவர் பகுதிகளுக்கு நம்மை அழைத்துச் செல்லும் பயணக் கட்டுரைகள் தனித்த அனுபவத்தின் பதிவுகளாகக் கவர்கின்றன. ஆன்மிகப் பகுதியில் பக்தர்கள் தரிசிக்கத் தவமிருக்கும் 12 ஜோதிர்லிங்கத் தலங்கள் குறித்து விரிவான பதிவு, பிரபல ஓவியர் வேதாவின் கைவண்ணத்தில் திருச்சி தாயுமான சுவாமி, உச்சிப் பிள்ளையார் கோயில், திருவானைக்கா, ஸ்ரீரங்கம் சிற்பங்களும் காட்சிகளும் இடம்பிடித்துள்ளன.
இவற்றுடன், தஞ்சாவூர்க் கவிராயர், முகில், நன்மாறன், எஸ்.வி. வேணுகோபாலன் ஆகியோரின் கட்டுரைகளுடன் இணையத்தில் கலக்கும் பெண் எழுத்தாளர்கள் குறித்தும் செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலியின் பேட்டியும் கூடுதல் சுவைகூட்டும் வகையில் அமைந்துள்ளன.