இந்து தமிழ் திசை தீபாவளி மலர் 2025
இந்து தமிழ் திசை 13ஆவது ஆண்டு தீபாவளி மலரின் முக்கிய அம்சங்கள்:
பிரபலங்களின் பேட்டிகள்
பிரபல சினிமா நடிகர் சிவகார்த்திகேயன், 'ராட்சசன்' திரைப்படத்தால் அடையாளம் பெற்ற இயக்குநர் ராம்குமார், ஸ்டாண்ட் அப் காமெடியில் தனி முத்திரை பதித்துவரும் அலெக்சாண்டர் பாபு, தமிழ்நாட்டின் நவீன ஓவிய அடையாளமாக மாறிவிட்ட ஓவியர் மருது, உலகெங்கும் தன் எழுத்தால் அறியப்படும் எழுத்தாளர் பாமா ஆகியோரின் பேட்டிகள் இந்த மலரின் பன்முகத்தன்மைக்கு ஓர் அடையாளம்.
சுற்றுலா
உலகச் சுற்றுலா என்பது இன்றைக்கு எளிதாகி வருகிறது.
அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் இருக்கும் கடற்கரை நகரான சான்பிரான்சிஸ்கோ, உலகின் சிறிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர், பாரம்பரிய ஒலிம்பிக் நடைபெறும் கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ், இந்தோனேசியத் தீவான சுமத்ரா ஆகியவற்றின் சுற்றுலா சிறப்புகளை அலசும் கட்டுரைகள் பயணம் பகுதியில் இடம்பெற்றுள்ளன.
வடகிழக்கு மாநிலங்களின் முனையில் உள்ள அருணாசல பிரதேசம், கொடைக்கானல் பகுதியின் தனித்துவ கிராமமான பூம்பாறை ஆகிய பகுதிகள் குறித்த கட்டுரைகளும் போனஸ் சுற்றுலாவாக அமைந்துள்ளன.
பிரபல எழுத்தாளர்கள் நிவேதிதா லூயிஸ், ஜிஎஸ்எஸ், மாத்தளை சோமு, டாக்டர் வி.விக்ரம்குமார், பாரதி திலகர் உள்ளிட்டோர் இந்தக் கட்டுரைகளை எழுதியுள்ளார்கள்.
இசை & சினிமா
சாய் அபயங்கர் முதல் 'பொட்டல முட்டாயே' புகழ் சுப்லாஷினி வரையிலான 10 இளம் சுயாதீன இசைக் கலைஞர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
நூற்றாண்டு காணும் தமிழின் 'கானக் குயில்' பி.சுசீலா குறித்த சினிமா வரலாற்று எழுத்தாளர் பி.ஜி.எஸ்.மணியனின் கட்டுரையுடன், நூற்றாண்டு கண்ட 10 முன்னணி சினிமா ஆளுமைகளின் பங்களிப்பு பற்றி பேசுகின்றன சினிமா பகுதிக் கட்டுரைகள்.
அத்துடன் பான் இந்திய சினிமா எனும் புதிய வகை சினிமாக்கள் எப்படி நம் பொழுதுபோக்கின் ஆன்மாவை சிதைக்கின்றன என்பது குறித்தும், மூத்த சினிமா ஆபரேட்டர் இந்திரகுமார் தன் சுவாரசிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ள கட்டுரைகளும் இந்தப் பகுதிக்கு கூடுதல் அழகு சேர்க்கின்றன.
இலக்கியம் & நாடகம்
மூத்த எழுத்தாளர்கள் பாவண்ணன், பாரததேவி, ஏக்நாத், வளர்ந்துவரும் எழுத்தாளர்கள் சவிதா, மலர்வதி ஆகியோர் எழுதியுள்ள சிறுகதைகள் வாசிப்பு இன்பத்துக்கு தீனி போடும்.
அத்துடன் நாடக ஆளுமை அ.மங்கை தனது 40 ஆண்டு கால நாடக அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
சிறிய ஊராக இருந்தாலும் தமிழ்நாட்டின் இலக்கிய நகரமாக அறியப்பட்டுள்ள கோவில்பட்டி குறித்து உதயசங்கரும், தேடித்தேடி வாசிக்கப்பட்ட அந்தக் கால தீபாவளி மலர்கள் குறித்து ஒரு நாஸ்டால்ஜியா கட்டுரையை எழுத்தாளர் கமலாலயனும் எழுதியுள்ளார்.
ஆன்மிகம் & நகைச்சுவை
பிரபல ஓவியர் வேதாவின் கைவண்ணத்தில் அபிராமி அந்தாதிப் பாடல்கள் பூஜையில் வைத்து வழிபடும் ஓவிய வடிவத்தைப் பெற்றுள்ளன.
அத்துடன் பஞ்ச ரங்கத் தலங்கள், பஞ்ச கிருஷ்ணர் தலங்கள் என 10 ஆன்மிகத் தலங்களின் சிறப்புகள் ஆன்மிகப் பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளன.
தீபாவளி மலர் என்று சொல்லிவிட்டு நகைச்சுவை இல்லாமல் எப்படி? பிரபல சினிமா காட்சிகளை மையமாகக் கொண்ட நகைச்சுவை படக்கதைகள், காட்டுயிர் நகைச்சுவை ஒளிப்படங்கள், ஓவியர் முத்து, வெங்கியின் நகைச்சுவை துணுக்குகள் அணிவகுத்துள்ளன.
முடிப்பு
இப்படி அனைத்து வயதினரும் வாசிக்கும் வகையில் கட்டுரைகளை கவனமாகத் தொகுத்துள்ளோம்.