சமகாலத்தில் மனித குலம் கண்டிராத பெருந்தொற்றைப் பல இழப்புகள், சிரமங்களுடன் கடந்துவந்துவிட்டோம். அதில் 2021ஆம் ஆண்டு மிக முக்கியமானது. அந்த ஆண்டில்தான் கோவிட் தடுப்பூசியும் வெற்றிகரமாகப் பரவலாக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் ‘இந்து தமிழ் திசை’நாளிதழின் கருத்துப் பேழை பகுதியில் வெளியான பல கட்டுரைகள் பெருந்தொற்று தொடர்பான முக்கியத் தகவல்கள் அடங்கியதாகவும், அதை எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பேசுவதாகவும் அமைந்திருந்தன. அதேவேளையில் சமூக நிகழ்வுகள், ஜனநாயக விழுமியங்கள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள், வரலாற்றுச் சுவடுகள், மொழி அரசியல், இலக்கியம் எனப் பல்வேறு விஷயங்களை விரிவாகப் பேசும் கட்டுரைகளும் இடம்பெற்றுவந்தன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. வாசகர்களின் தொடர் கோரிக்கைகளை ஏற்று இந்தத் தொகுப்பைக் கொண்டுவந்திருக்கிறோம்.
வெவ்வேறு வகைமைகள், கட்டுரையாளர்கள், பேசுபொருள்கள் எனப் பல வகைப்பாடுகளின் அடிப்படையில் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் இந்தக் கட்டுரைகள், மிக முக்கியமான காலகட்டத்தை இயன்றவரை விரிவாகப் பதிவுசெய்திருக்கின்றன. இந்நூலில் 50 கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆடையைக்கூட ஆயுதமாக்கிப் புரட்சி செய்ய முடியும் என நிரூபித்த மகாத்மா காந்தியின் போராட்ட முறையைப் பதிவுசெய்யும் கட்டுரையிலிருந்து தொடங்கும் இந்தத் தொகுப்பு, அண்ணா முன்னெடுத்த சுயாட்சி முழக்கம், ஜே.சி.குமரப்பா முன்னெடுத்த வேளாண் சீர்திருத்தக் கொள்கை, பேரழிவின் காலத்தில் காந்தியின் செயல்பாடுகள், வட்டார வரலாற்றின் முக்கியத்துவம் என வரலாற்றுரீதியிலான பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளைக் கொண்டது.