தொன்மங்கள் குறித்த மறுவிசாரணை பல ஆயிரம் ஆண்டுகளாக நம் சமூகத்தில் புழங்கிவரும் தொன்மம், நமது பண்பாட்டு அம்சமாகும். தொன்மங்கள், சமூகத்தின் நம்பிக்கையாகக்கூடப் புது வடிவம் பெற்றுள்ளன. நமது வழிபாடுகள், சடங்குகள், நீதிகள், பழக்க வழக்கங்கள் என எல்லாவற்றிலும் தொன்மம் பாதிப்பை விளைவித்துள்ளது. தமிழ்ச் சமூகத்தின் நாட்டார் தொன்மங்களையும், புராணத் தொன்மங்களையும் இந்த அம்சத்துக்கு உதாரணமாகச் சொல்லலாம்.
உலகத்தில் பரவலாகப் பல நாடுகளில் தொன்மத்தை மறுவிசாரணை செய்யும் போக்குக் கலை வடிவங்களில் வெளிப்பட்டுவருகிறது. இந்தியாவில் இந்த அம்சம் சற்றுத் தீவிரம்தான். மகாபாரதம், ராமாயணம் ஆகிய இரு பெரும் இதிகாசங்கள் இதற்கான காரணங்கள் என மதிப்பிடலாம். இந்த இரு இதிகாசங்களும் ஆயிரக்கணக்கான கிளைக் கதைகளைக் கொண்டவை. இந்தியா முழுவதும் பல நூறு ராமாயணங்கள் பாடப்பட்டுள்ளன. வால்மீகியும், கம்பரும் நாம் அறிந்த இருவர். அவ்வளவுதான். ஒவ்வொரு ராமாயணமும் வேறுபாடு உடையவை. அதுபோல் வியாசரின் மகாபாரதம் என்னும் மாபெரும் காவியத்தைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. உலகின் பெரும் படைப்புகளில் ஒன்று அது. கடற்கரையில் மணல் துகள்கள்போல் மகாபாரதம் முழுவதும் தொன்மக் கதைகள்தான். அறிவியல் வளர்ச்சி பெற்ற இந்தக் காலத்திலும் மகாபாரதத்தின், ராமாயணத்தின் அம்சங்கள் நம் சமூகத்தில் தொடர்வதைப் பார்கலாம். இந்த இரு இதிகாசங்களின் தொன்மக் கதாபாத்திரங்களைக் கொண்டு இன்றைய கால கட்ட மனிதர்களை மதிப்பிடும் போக்கையும் நாம் பார்க்கலாம்.