செறிவும் சுவாரஸ்யமும் ஒன்றை விட்டு ஒன்று கோபித்துக்கொண்டு விலகிச் செல்லாத வகையில் எழுத முடிகிற கட்டுரை ஆசிரியர்களில் பழ. அதியமான் தனிக் கவனத்துக்கு உரியவர். ‘வைக்கம் போராட்டம்’, ‘சேரன்மகாதேவி குருகுலம்’, ‘அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப்’ உள்ளிட்ட அதியமானின் நூல்கள் அவரது ஆய்வுத்திறனுக்குச் சான்றுகள். ‘‘இந்து தமிழ் திசை’’யின் தலையங்கப் பக்கத்தில் அதியமான் எழுதி வந்த ‘அற்றைத் திங்கள்’ தொடர், அவர் ஏற்கெனவே எழுதிய கட்டுரைகள் நமக்கு அளித்திருந்த எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றியது.
கடந்த காலத்தின் படிப்பினைகளை உள்வாங்கிக்கொண்ட முதிர்ச்சியோடு தற்காலச் சமூக நடப்புகளை எளிமையும் இலக்கிய அழகும் வாய்ந்த நடையில் பதிவு செய்தது அத்தொடரின் சிறப்பு. பண்டிதர்களோடு பழகினாலும் எளிமையான வாசகர்களுக்கும் தீவிரமான செய்திகளை அவர்களது மூளை நோகாமல் புகட்ட முடிவது அரிய கலை. அது அதியமானுக்குக் கைவந்துள்ளது. பாமரர்களுக்கும் புரிய வேண்டும் என்பதை ஒருபோதும் தளர்த்திக்கொள்ளாத வானொலியில் அவர் பணிபுரிந்த அனுபவமும் இதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும். எல்லை மீறாத எள்ளல் அதியமானுக்குக் கிட்டியுள்ள கொடை என்றே கூறலாம்.
சுருக்கமான பத்தி வடிவத்தில் கட்டுரை எழுதும்படி கூறுவது, கடல்போலத் தரவுகளைக் கொண்டுள்ள அதியமான் போன்றோரைத் தளைப்படுத்துவதுபோன்றதுதான். ஆனால் அதையும் இன்முகம் மாறாமல் ஏற்றுக்கொண்டு, இந்து தமிழ் வாசகர்களுக்குச் செழுமையான விருந்து படைத்தார். சம கால நிகழ்வுகளை அவற்றுடன் தொடர்புடைய வரலாற்று நிகழ்வுகளோடு கோத்து அவர் எழுதிய கட்டுரைகள், குழந்தைகள் மருந்து என்றே அறியாமல் உண்ணும் சத்துணவின் சிறப்பைக் கொண்டிருந்தன.