கல்யாணசுந்தரத்தின் புகழ்பாடும் நூல்
‘மக்கள் கவிஞர்’ எனப் போற்றப்படும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மறைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், மக்கள் மனதில் தனது கவிதைகள், பாடல்கள் மூலம் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எளிய மக்களின் வாழ்க்கைப் பாடுகளை, பாட்டுக்களாக வடித்த கல்யாணசுந்தரம், வெறும் 29 ஆண்டுகள் மட்டுமே இந்த மண்ணில் வாழ்ந்தவர். எனினும், உழைக்கும் மக்களின் உரிமைக் குரல்களாக ஒலித்த அவரது திரையிசைப் பாடல்கள், காலங்கள் பல கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் உயிராற்றலைப் பெற்றிருக்கின்றன.
இத்தகையச் சிறப்புமிக்க மக்கள் கவிஞரின் புகழ்பாடும் ஏராளமான நூல்கள் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன. எனினும் கவிதை வடிவில் மக்கள் கவிஞரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி புதுமை படைத்திருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் கவிஞர் ஜீவி.
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கும், இந்நூலின் ஆசிரியர் கவிஞர் ஜீவிக்கும் ஓர் ஒற்றுமை தெரிகிறது. மக்கள் கவிஞர், விவசாயிகளைத் திரட்டி சங்கம் அமைத்தவர். அதேபோல் ஜீவியும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்காக சங்கம் அமைத்து பாடுபட்டிருக்கிறார். சங்கம் அமைத்து தொழிலாளர்களுக்காகப் பாடுபட்ட இருவரும் கவிஞர்கள். மக்கள் கவிஞருக்கு, தாம் அறிந்த கவிதை வடிவிலேயே வரலாறு எழுதி அவரது புகழ் பாடியிருக்கிறார் ஜீவி.