
பணம் இன்றி அசையாது உலகு
நீர் அற்றுப் போனால் இந்தப் பூமிப் பந்து உயிர் அற்றுப் போகும் என்பதை ‘நீரின்றி அமையாது உலகு’ என்று வள்ளுவர் பெருந்தகை கூறிச் சென்றார். அதைப் போலவே பணம் இல்லாவிட்டால் நம் வாழ்க்கை வெறுமையாகிப் போய்விடும் என்பதை இந்த நூலின் தலைப்பிலேயே அறுதியிட்டுக் கூறுகிறார் நூலாசிரியர் சோம வள்ளியப்பன்.
இன்றைய உலக இயக்கத்தின் அச்சாணி போன்ற சக்தியாக பணம் திகழ்கிறது என்பதை ‘பணம் இன்றி அசையாது உலகு’ என்ற இந்நூலில் இடம்பெற்றுள்ள 27 கட்டுரைகள் மூலம் விரிவாக அலசி ஆராய்ந்துள்ளார் நூலாசிரியர்.
நம்மைச் சுற்றிலும் பல பேர் நிறைய சம்பாதித்தாலும் கூட, கடனில் சிக்கி நிம்மதி இழந்து தவிப்பதைப் பார்க்கிறோம். அதே நேரத்தில் குறைந்த சம்பளமே வந்தாலும் கூட, சரியான பண நிர்வாகத்தால், திட்டமிட்டு சேமித்து, அந்தப் பணத்தைப் பெருக்கி, சகல வசதி வாய்ப்புகளையும் பெற்று நிம்மதியாக வாழ்பவர்களையும் பார்க்கிறோம். ஆகவே, கை நிறைய சம்பாதிக்கும் திறன்களை வளர்த்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதைவிடவும் கிடைக்கும் பணத்தை சரியாக நிர்வாகம் செய்யும் திறன்களை வளர்த்துக் கொள்வதுதான் மிக மிக முக்கியம். அந்தத் திறன்களை வளர்த்துக்கொள்ள சோம வள்ளியப்பன் எழுதியுள்ள இந்த நூல் நிச்சயமாக நல்ல வழிகாட்டியாக அமையும்.