அந்தக் காலம் முதல் அறிவியல் வளர்ச்சியடைந்த இந்தக் காலம் வரை பறவைகள் நமக்கு வியப்பை அளித்துக் கொண்டேதான் இருக்கின்றன. பறவைகளால் எப்படிப் பறக்க முடிகிறது, ஏன் மனிதர்களால் பறக்க முடியவில்லை என்கிற கேள்வி கேட்காத சிறார்களே இருக்க முடியாது. தன்னால் பறக்க இயலாது என்பதை அறிந்த மனிதன், பறவை போல் பறக்கும் விமானத்தைக் கண்டறிந்து, தன் பறக்கும் ஆசையைத் தீர்த்துக்கொண்டான்.
சுமார் 14 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒருவகை பறக்கும் டைனசோரிலிருந்து பறவைகள் உருவாகி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. சுமார் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு எண்ணற்ற பறக்கும் உயிரினங்கள் உருவாகி, சூழ்நிலைக்கு ஏற்பத் தங்களை தகவமைத்துக்கொண்டு, பறவைகளாக உருவாயின. இன்று 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் காணப்படுகின்றன.
பறவைகள் என்று சொல்லப்பட்டாலும் எல்லாப் பறவைகளும் ஒன்றுபோல் இல்லை. சில பறவைகள் மிக உயரமாகப் பறக்கின்றன. சில பறவைகள் தாழ்வாகப் பறக்கின்றன. சில பறவைகள் சிறு விலங்குகளை வேட்டையாடி உண்கின்றன. சில பறவைகள் புழு, பூச்சிகளை உண்கின்றன. சில பறவைகள் வேகமாகப் பறக்கின்றன. சில பறவைகளால் பறக்கவே இயலவில்லை. சில பறவைகள் கூடுகளில் முட்டை இடுகின்றன. சில பறவைகள் அடுத்த பறவைகளின் கூடுகளில் முட்டை இடுகின்றன. சில பறவைகள் பருவநிலை மாறும்போது உணவுக்காக நீண்ட தொலைவுக்கு வலசை செல்கின்றன. இப்படி வாழும் பகுதிக்கு ஏற்ப பறவைகளின் உடலமைப்பு, நடத்தை, பண்புகள் வேறுபடுகின்றன. உலகம் முழுவதும் அதிகமான நிலப்பரப்புகளில் வாழும் ஒரே உயிரினமாகப் பறவைகள் இருக்கின்றன.