குழந்தைகளின் மன உலகம் எல்லைகளற்றது. தேடல் நிறைந்தது. எதையாவது ஆராய்ந்து கொண்டும், அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டுக்கொண்டும் துறுதுறுப்பாக இருப்பதே குழந்தைகளின் இயல்பு.
பல நேரங்களில் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இருப்பதில்லை. குழந்தைகள் கேட்கும் கேள்விகளிலிருந்தே அவர்கள் கற்றுக்கொள்ளத் தொடங்குகிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.
குழந்தைகளின் சுயசிந்தனைக்கும், கற்பனைத் திறன் வளர்ச்சிக்கும் கதை நூல்களைப் படிப்பது அவசியம். ஒரு கதையைப் படிக்கும் குழந்தைக்கு, அந்தக் கதையில் வரும் ஒவ்வொரு நிகழ்வும் ஓர் அனுபவமாக விரிகிறது. சிக்கலான நேரங்களில் சிந்தித்து முடிவடுக்கும் ஆற்றலையும், தோல்வி கண்டு துவண்டு போகாத தன்னம்பிக்கையையும் தாங்கள் வாசிக்கும் கதைகள் வழியே குழந்தைகள் பெறுகிறார்கள்.