இதுவரை பிரதமராக இருந்த எவரும் இப்படி கட்சியின் அடிமட்டத் தொண்டர் நிலையிலிருந்து தலைமைப் பதவிக்கு உயர்ந்ததில்லை. அது வெறும் அதிருஷ்டத்தின் மூலமோ, குடிப்பிறப்பின் மூலமோ அவருக்கு வாய்த்துவிடவில்லை. குஜராத் முதலமைச்சராகப் பதவியேற்றது, மிகப் பெரிய வகுப்புக் கலவரத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன் அதன் பிறகு கலவரத்துக்கே இடம் கொடாமல் பார்த்துக் கொண்டது, தொடர்ந்து மூன்று முறை குஜராத் முதலமைச்சராக தேர்தலில் வெற்றி பெற்று பதவி வகித்தது, நல்வாழ்வு திட்டங்களை அரசின் நிதியாதாரத்துக்கு சேதம் இல்லாமல் நிறைவேற்றியது, ஊழலுக்கு இடம்தராமல் நிர்வகித்தது, திட்டமிட்டு செயல்களைச் செய்தது, கட்சியையும் அரசு அதிகார இயந்திரத்தையும் ஒருங்கிணைத்தது என்று மோடியின் நிர்வாகத் திறமை பலதிறப்பட்டது. விமர்சகர்கள் பலரும் இவற்றைப் பற்றி குறிப்பிட்டதுகூட கிடையாது. 2014-ல் பாரதிய ஜனதாவின் தேசியத் தலைமையை ஏற்று பிரதமர் பதவிக்கான வேட்பாளராகி, தேர்தல் உத்திகளை வகுத்து வெற்றி பெற்றது என்று அனைத்துமே நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. மோடியின் அரசியல் வாழ்க்கையைக்கூட நிறை – குறைகளை விவரித்து விமர்சிக்காமல், வாசகர்களுக்கு அவருடைய ஆற்றலை மட்டும் உணர வைத்திருக்கிறார் நூலாசிரியர். அரசியல், சமூகவியல், பொருளியல், மானுடவியல் மாணவர்களும் ஆர்வலர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல். இந்தியாவின் மேற்குப்புற மாநிலத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவர் உலகத் தலைவர்களில் ஒருவராக இன்று அமெரிக்க அதிபர் பிடேனாலும் ஆஸ்திரேலியப் பிரதமராலும் பாராட்டப்படுவதும் ரஷ்ய, பிரெஞ்சு, கனடா அதிபர்களால் மதிக்கப்படுவதும் தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வு அல்ல.