புதுக்கோட்டை மாவட்ட அருங்காட்சியகக் காப்பாட்சியராகப் பணியாற்றிய ஜெ.ராஜாமுகமது எழுதிய ‘புதுக்கோட்டை மாவட்ட வரலாறு’ என்ற இந்நூல், அம்மாவட்ட மக்களுக்கும், தமிழகத்தின் ஆய்வாளர்களுக்கும் கிடைத்த பெரும் கொடை என்றே சொல்ல வேண்டும்.
வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி இவர், புதுக்கோட்டை மாவட்ட வரலாற்றை மிகவும் ஆழமாக ஆராய்ந்திருப்பது இந்நூலுக்கு சிறப்பு சேர்த்துள்ளது. இம்மாவட்டம் சங்க காலத்தில் பெற்றிருந்த சிறப்பு விவரிக்கப்பட்டிருக்கிறது. சுமார் கி.மு.200 முதல் கி.பி.200 வரை வழக்கிலிருந்ததாகக் கருதப்படும் பிராமி (தமிழ்) கல்வெட்டு (எழுத்துகள்) புதுக்கோட்டை மாவட்டத்தில் கிடைத்திருப்பதன் மூலம் இம்மாவட்டத்துக்குக் கிடைத்திருக்கும் வரலாற்றுச் செழுமையைப் பற்றி நூலாசிரியர் பேசுகிறார்.
புதுக்கோட்டைப் பகுதி வணிகர்கள், உள்நாட்டின் பிற பகுதி வணிகர்களோடு மட்டுமன்றி, கடல் கடந்த வாணிபத் தொடர்பையும் கொண்டிருந்தார்கள். இதனை இங்கு கிடைக்கப் பெற்ற கி.மு.29க்கும் கி.பி.79க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த ரோம நாட்டு நாணயக் குவியல்கள் வாயிலாகத் தெரிய வருவதாக அவர் நிறுவுகிறார். இதன் மூலம் புதுக்கோட்டை பகுதியின் செல்வச் செழிப்பையும், நாகரிகத்தின் வளர்ச்சியையும் அறிய முடிகிறது.
கி.பி.300 முதல் கி.பி.590 வரையிலான களப்பிரர்கள் ஆட்சி, முதல் பாண்டியப் பேரரசு, பல்லவர்கள் காலம், பிற்காலச் சோழப் பேரரசு என காலவரிசைப்படி புதுக்கோட்டை மாவட்ட வரலாற்றை வரிசைப்படுத்தியுள்ள நூலாசிரியர், பாண்டியப் பேரரசு வீழ்ச்சி பற்றியும், அதற்குப் பின் விஜயநகர ஆட்சியின் கீழ் புதுக்கோட்டை ஆளப்பட்டது பற்றிய தகவல்களையும் மிகுந்த அழகியல் தன்மைகளோடுத் தொகுத்துத் தந்துள்ளார்.