உண்மைகள் பொய்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்துவிடும். எதார்த்தங்கள், கற்பிதங்களை வெல்லும். பெண்களின் மீது சுமத்தப்பட்ட சமூக அவலங்களுக்கு எதிரான முன் நகர்வுகள் எல்லாம் அவை முன்மொழியப்பட்டபோதே நிராகரிக்கப்பட்டன. ஆனால், அவையெல்லாம் ஏற்றுக்கொள்ளத்தவையே என்பதைச் சமூக மாற்றம் காலந்தோறும் நமக்கு உணர்த்தியபடி இருக்கிறது.
ஒரு காலத்தில் அந்நியமாகப் பார்க்கப்பட்டவை இன்று தவிர்க்க முடியதவையாக ஆகிவிட்டன. கட்டமைக்கப்பட்டு, கட்டாயமாக்கப்பட்டவை யாவும் கால வெள்ளத்தில் காலாவதியாகிவிட்டன. வதைகளைக் கையளித்தவர்களை வராலாறு அடையாளம் காட்டுவதோடு அதிலிருந்து மீள்வதற்கான பாதையையும் குறிப்பால் உணர்த்துகிறது. ஆனால், இவை எதுவும் இயல்பாக நடந்தேறிவிடவில்லை. அவற்றை எற்றுக்கொள்ளும் வகையில், சமூகத்தைப் பண்படுத்தியவர்களின் போராட்டமில்லாமல் இந்த மாற்றங்கள் சாத்தியமாகியிருக்காது. அப்படியான மாற்றங்களுக்கு வித்திட்ட வீரப்பெண்களைத்தான் ‘பெண் எனும் போர்வாள்’ காட்டுகிறது.
இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள், ‘இந்து தமிழ் திசை’யின் ‘பெண் இன்று’ சிறப்புப் பக்கத்தில் வெளியானவை. தொடராக வெளிவந்தபோதே பாராட்டும் விமர்சனங்களுமாக வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றவை.