“வாழ்க்கையில் சிக்கல்கள் இல்லை; அதை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் சிக்கல்கள் உள்ளன. நம் வாழ்க்கையில் நடப்பவை நம்மை துன்புறுத்துவதில்லை; அதைப் பற்றி நாம் எண்ணும் எண்ணங்கள்தான் நம்மை துன்புறுத்துகின்றன. நம்மால் நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் மாற்ற முடியும். மூளையும் மனமும் இசைந்து அற்புதங்கள் நிகழ்த்தலாம்” என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுவது வெறும் வார்த்தைகள் அல்ல; துவண்டு கிடக்கும் மனித மனங்களுக்கு நம்பிக்கையூட்டி, பெரும் உற்சாகம் அளிக்கும் வீரியம் மிகுந்த தன்னம்பிக்கை மருந்து எனலாம்.
அதே நேரத்தில், இந்தக் கட்டுரைகள் வெறும் ‘தன்னம்பிக்கை’ போதனைகளாக மட்டும் இல்லாமல், உளவியல் கண்ணோட்டத்துடன் விளக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துகள் வாசகர்களின் சிந்தனையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை.