நம்முடைய பேராளுமைகளின் வரலாற்றையும் விழுமியங்களையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டுசெல்லும் ‘இந்து தமிழ் திசை’யின் மேலும் ஒரு முயற்சிதான் ‘மாபெரும் தமிழ்க் கனவு’.
தமிழ்நாடு கண்ட மகத்தான அரசியல் தலைவரான பேரறிஞர் அண்ணா மறைந்து ஐம்பதாண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், அண்ணா என்கிற ஆளுமை இந்த அரை நூற்றாண்டாக நவீனத் தமிழ்நாட்டின் வரலாற்றில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களையும் சுதந்திர இந்தியாவில் ஏற்படுத்தி யிருக்கும் தாக்கங்களையும் நினைவுகூர விரும்பினோம். அண்ணாவை அவருடைய முக்கியத்துவத்துடன் இளைய தலைமுறைக்கு அறிமுகப் படுத்தும் ஒரு நல்ல புத்தகம் இன்று நம்மிடம் இல்லை என்கிற வெற்றிடம் இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கத்தைப் பெரிதாக்கியது. அண்ணாவின் வரலாறு; அண்ணாவின் பேச்சுகள் - எழுத்துகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்; அண்ணாவின் அரசியலின் தனித்துவத்தையும் சர்வதேச அளவில் இன்றைய அதன் பொருத்தப்பாட்டையும் சொல்லும் ஆளுமைகளின் கட்டுரைகள் என்று இப்புத்தகம் விரிந்திருக்கிறது.
உருவாக்க அளவில் சமூக ஆய்வு நிறுவனங்களுக்கு மட்டுமே சாத்தியமுள்ள ஒரு முயற்சி இந்நூல். ஏனென்றால், முறையாகப் பாதுகாக்கப் படாததால் அண்ணாவின் ஆக்கங்களில் மிகுதியானவை இன்று காலத்தின் செல்லரிப்புக்கு ஆளாகிவிட்ட நிலையில், ஒரு நாளிதழின் பதிப்புப் பிரிவின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட தேடலையும் ஆய்வையும் இந்நூலின் உருவாக்கம் கோரியது. எங்களால் இயன்றவரை முயன்றிருக்கிறோம்; தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டினால், அடுத்தடுத்த பதிப்புகளில் சரி செய்துகொள்வோம்.
தமிழ்ச் சமூகத்தின் உயர்வுக்காகக் காலமெல்லாம் உழைத்த, பல்லாயிரக் கணக்கான பக்கங்களை எழுதிய, லட்சக்கணக்கான பக்கங்களுக்கு நீளக் கூடிய உரைகளை ஆற்றிய பேராளுமையான அண்ணாவுக்கு எங்கள் எளிய மரியாதை இது. அண்ணாவின் சிந்தனைகளின் சிறு துளியையேனும் ஒரு வாசகருக்கு இந்த நூல் மூலம் கடத்த முயன்றால் மகிழ்ச்சி கொள்வோம்.