
வண்ணக் கிளிஞ்சல்கள்
வாழ்வின் அனைத்து நிலைகளிலும் அனுபவங்களே நமக்குப் பாடம் எடுக்கின்றன. அவையே ஆசானாகவும் இருந்து வழிகாட்டுகின்றன. அனுபவங்களின் வழிப் பெறப்படுகின்ற பாடங்கள் ஏதோ ஒன்றை உணர்த்திவிட்டே செல்கின்றன. எழுத்தாளர் பாவண்ணனின் ‘வண்ணக் கிளிஞ்சல்கள்’ என்கிற அனுபவங்களின் தொகுப்பும் அப்படித்தான்.
இந்தத் தொடரின் வழியே பாவண்ணன், தன் அனுபவங்களோடு மனித மனங்களின் ஈரத்தை, சக மனிதனுக்குத் தோள் கொடுக்கும் இயல்பை, இருப்பை, யதார்த்த அழகியலுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் வாசகர்கள் பெற்றுக்கொள்ளவும் கற்றுக்கொள்ளவும் ஏராளமாக இருக்கின்றன!
உச்சி வெயில் நேரத்தில் மரத்தடியில் அமர்ந்து வெல்லம் விற்கும் ஏழைப் பெண் ஒருவர், பசியால் வெல்லத்தைத் தவிப்போடு பார்க்கும் மாணவர்களுக்குச் சிறிதும் தயங்காமல் வெல்லத்தை உடைத்துக் கொடுக்கும் கட்டுரையைப் படிக்கும்போது, ’வெல்லம் நம் கைகளில் பிசுபிசுப்பாக உருகி வழிவதையும் அதைச் சுவைக்கும் பரவசத்தையும்’ நம்மால் உணர முடிகிறது என்றால், அது பாவண்ணனின் அசாத்தியமான எழுத்துக்குச் சான்று!