நிலவு காட்டிச் சோறூட்டும் தாயன்பு நம்முடையது. மமதி சாரியோ நமக்கு நிலவைக்காட்டி நற்கனவை ஊட்டுகிறார். கனிவான கானகம் வழியே நிலா இறங்கி வரும் படி - மலை நோக்கிய அவிரா என்கிற சிறுமி தன்னுடைய லட்சியத்தை மனதில் ஏந்தி நடக்கும் இக்கதை, வரிக்கு வரி மயில் தோகைபோல் நம் மனதை வருடுகின்றது. தமிழராகிய நம் மரபார்ந்த வாழ்வும், அதனுடன் பின்னிப் பிணைந்திருக்கும் இயற்கையும், மனம் சில்லிட வைக்கும் ஃபாண்டசியும் அவிராவுடன் கைகோர்த்துக்கொண்டு நடக்கின்றன. இனிக்கும் கானகக் காற்று தனது மாசற்ற நிலையை நம் முகம் தொட்டுச் சொல்கிறது.