மனித வாழ்க்கை என்பது வெற்றிகளால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. உண்மையில், ஒரு மனிதன் எதிர்கொள்ளும் வெற்றியைவிட, தோல்விகளின் எண்ணிக்கைதான் அதிகம். வெற்றிகள் பெரும்பாலும் களிப்புகளைத்தான் தருகின்றன. ஆனால், தோல்விகள்தான் மேலும் முயற்சி செய்ய வேண்டும், மேலும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தைத் தருகின்றன. தோல்விகளைச் சந்திக்கும் மனிதன்தான் சவால்களை எதிர்கொள்ளும் மன வலிமையைப் பெறுகிறான்.
வெற்றியும் தோல்வியும் சேர்ந்ததே மனித வாழ்க்கை. இந்த உண்மையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதும் மனோபாவம் கொண்டவர்களால்தான் வாழ்க்கையில் வெற்றிப் பெற முடியும். இந்த மனோபாவத்தை வாசகர்கள் மத்தியில் வளர்க்க வேண்டும் என்ற நோக்கிலேயே ‘வெற்றியின் எல்லை வெகுதூரமில்லை...’ என்ற இந்நூலை கவிஞர் மு.முருகேஷ் எழுதியுள்ளார்.
“வெற்றி என்பதே அனைவரின் இலக்காயினும் அந்த முயற்சியில் சிறு தடுமாற்றமோ அல்லது தோல்வியோ அடைந்துவிட்டால் முற்றாய் நொறுங்கிப்போகும் மனிதர்கள் குறித்த மிகுந்த அக்கறையோடும், அவர்களிடம் நேர்மறையான சிந்தனைகளை உருவாக்க வேண்டுமென்ற ஆவலிலும் இந்நூலில் உள்ள கட்டுரைகளை எழுதியுள்ளேன்” என்கிறார் முருகேஷ்.