அப்படிப்பட்ட மாணவர்களின் உண்மையான திறனும் ஆர்வமும் எந்தப் பாடத்தில் இருக்கின்றது என்பதை அந்த மாணவனிடம் பேசித் தெரிந்துகொண்டு, அவனுடைய உயர் கல்விக்கான ஆலோசனையை வழங்குவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.
ஆனால், பொதுவாக நம் சமூகத்தில் பெற்றோரின் வற்புறுத்தலும் இறுதி முடிவுமே ஒரு மாணவனின் உயர் கல்வியை முடிவு செய்யும் நிலை உள்ளது. இதனால் மாணவன் விரும்பும் துறையில் படிப்பு; படிப்புக்கேற்ற வேலை என்னும் இரண்டுக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது. அந்த இடைவெளியை நிரப்பும் பணியைச் செவ்வனே செய்வதுதான் இரா.நடராஜன் `இந்து தமிழ் திசை'யில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்திருக்கும் இந்தப் புத்தகம்.
மாணவர்கள் விரும்பும் சரியான உயர் கல்வி எது, அதை எங்கே படிக்கலாம், அதற்கு என்ன மாதிரியான நுழைவுத் தேர்வை எழுத வேண்டும், குறிப்பிட்ட அந்தத் துறை சார்ந்த கல்வியை அளிக்கும் கல்வி நிலையங்கள் இந்தியாவில் எங்கெங்கெல்லாம் இருக்கின்றது என்னும் முழு விவரங்களும் கேள்வி - பதில் வடிவில் தொகுக்கப்பட்டிருக்கின்றது.
கேள்விகளை கேட்டிருப்பவர்களில் பெரும்பாலும் மாணவர்கள் என்பதிலிருந்தே, புதிய விடியலை விரும்பும் மாணவர்கள் உலகம் இந்தப் புத்தகத்தைக் கொண்டாடும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.