
தீபாவளி மலர் -2026
விலைரூ. 175/-
பக்கங்கள் 276
முன்பதிவுசிறப்புசலுகை – கூரியர்செலவு
தீபாவளி மலர் 2026
நம் இல்லங்களிலும் உள்ளங்களிலும் ஒளியேற்றுகிற தீபத் திருநாளின் பொலிவைக் கூட்ட பல்சுவையோடு மலர இருக்கிறது ‘இந்து தமிழ் திசை’ தீபாவளி மலர். ஓடியாடும் சிறுவர்கள் முதல் தங்கள் அனுபவத்தால் வாழ்க்கைப் பாடம் கற்றுத்தரும் மூத்தோர்வரை அனைவருக்குமான இதழாக இருப்பது இதன் மற்றுமொரு சிறப்பம்சம்.
கொண்டாட்டம்
பொக்கிஷ தீபாவளி: வழிவழியாகக் கொண்டாடப்பட்டுவரும் தீபாவளிப் பண்டிகை, விடுதலைப் போராட்டக் காலத்தில் எப்படிக் கொண்டாடப்பட்டது என்கிற சுவாரசியக் கேள்விக்குப் பதில் தருகிறது, ‘காந்தியின் தீபாவளி வாழ்த்து’ கட்டுரை.
அக்கரை சீமையில் தமிழர்கள் எப்படி தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்... ஒரு அயல்நாட்டுப் பார்வை.
மனதுக்குள் மத்தாப்பூ: தீபாவளியின் நினைவலையில் நனைவதொரு சுகம் என்றால், அந்தக் கால நினைவுகளை வார்த்தைகளின் வழி அசைபோடுவது பேரானந்தம்!
தீபாவளி மருந்தின் மகத்துவம், தயாரிப்பு முறை, முக்கியத்துவம் போன்றவற்றை டப்பா செட்டிக் கடை, சித்த மருத்துவர் ஆலோசனைகளுடன் விளக்குகிறது ஒரு கட்டுரை.
ஆன்மிகம்
ஆலயம் தொழுவோம்: நம் ஆன்மத் தேடலோடு ஆன்மிகத் தேடலுக்கும் சேர்த்து அருவிருந்து அளிக்கிறது நவக்கிரக தலங்கள், பஞ்சபூதத் தலங்களைப் பற்றிய விரிவான கட்டுரைகள்.
இறை இசை: இறைவனோடு உரையாட மராட்டிய இசை வடிவமான அபங்கத்தைத் தந்த துக்காராமின் கதை!
ஆழ்வார்களின் கருணை: முதலாழ்வார்கள் மூவரையும் சேர்த்து திருக்கோவலூர் தலத்தில் சந்திக்க நினைத்த திரிவிக்கிரமப் பெருமானின் ஆவல், நம் பக்தி மனத்தின் ஆவலையும் நிறைவேற்றுகிறது.
அம்மன் அருள்: எட்டு அம்மன்கள் மீது பாடப்பட்ட பாடல்களின் வழி அவர்களது அருளையும் திருவடிவையும் தரிசிப்பது கண்கொள்ளாக் காட்சி.
சினிமா
டிரெண்டிங்: சமூக ஊடகங்களில் பிரபலமாகி அந்த அடையாளத்தின் மூலம் வெள்ளித்திரையை எட்டிப் பிடித்திருக்கும் ஐந்து ‘ஐகான்’களின் பயோடேட்டாவை ‘ரீல்ஸ் டு ஸ்கிரீன்’ மூலம் அறிந்துகொள்ளலாம்.
மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் முத்தான 12 படங்கள் குறித்த சொற்சித்திரம்.
அதிநாயகி: ஆண்களே சூப்பர் ஹீரோக்களாக வலம் வரும் இந்தியத் திரையுலகில் புயலெனப் புறப்பட்ட முதல் பெண் சூப்பர் ஹீரோவின் கதை!
அசலும் நகலும்: ‘தி கிரேட் இந்தியன் கபில் ஷோ’ மூலம் வட இந்தியர்களுக்கு மிகவும் நெருக்கமாக அறிமுகமான சுனில் குரோவரின் வெற்றிப் பயணம்.
திரைத்தமிழ்: கவியரசர் கண்ணதாசனின் நூற்றாண்டையொட்டி அவரைப் பற்றிய அரிய பல தகவல்கள் நிறைந்த கட்டுரை.
நகைச்சுவை நாயகி: மூன்று தலைமுறை ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் நடிகை மனோரமாவைப் பற்றிய அரிய சித்திரத்தை ‘தன்னிகரில்லாத தனிப்பெரும் நாயகி’ கட்டுரை தருகிறது.
இசைப் பேரரசி: ஏறத்தாழ 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய பாடகி எஸ்.ஜானகியின் ஆளுமையையும் தனிச் சிறப்புகளையும் விளக்குகிறது, ‘இனிமையின் அறச்சீற்றம்’ கட்டுரை.
காலத்தால் அழியாத பாடகர் எஸ்.பி.பி.யின் மறக்க முடியாத பிளே லிஸ்ட்.
குரு பாரதிராஜாவும் முதன்மை சிஷ்யர் பாக்யராஜும் சந்தித்தால்... ஒரு கற்பனைக் கலந்துரையாடல்...
பயணம்
நெதர்லாந்தின் தலைநகரம் ஆம்ஸ்டர்டாமில் திரும்பிய பக்கமெல்லாம் ஆச்சரியப்படுத்தும் அருங்காட்சியகங்கள் குறித்து திகட்டத் திகட்ட விவரிக்கும் விரிவான கட்டுரை.
பறவைக் காதல்: கணினி - திறன்பேசி திரைகளில் தொலைந்துபோகிற நம் கவனத்தை இயற்கையின் பக்கம் திருப்புகிறது அமெரிக்கப் பறவை ஆர்வலரின் அனுபவக் கட்டுரை.
இமயத்தின் இதயம்: பெருவெள்ளத்துக்கு முந்தைய நேபாளத்தின் பேரழகை, செழுமையை, கோயில்களை, ஸ்தூபிகளை, சதுக்கங்களை, பாரம்பரிய உணவு முறைகளை கண்முன் கொண்டுவரும் ஜாலம்.
செலவில்லாத சுற்றுலா: சிரபுஞ்சியின் சாரலோடு இசை மழையில் நம்மை நனையவைத்துத் திகில் குகையை அறிமுகப்படுத்தி, வேர்ப்பாலங்களின் வழியாக இட்டுச் சென்று அமர்ந்த இடத்தில் இருந்தபடியே மேகாலயத்தைச் சுற்றிக் காட்டுகிறது, ‘நினைவில் நின்றுவிட்ட ஆரஞ்சுகளின் நிலம்’ பயணக் கட்டுரை.
மலரே மலரே உல்லாசம்: நீர்ப்பரப்பு முழுக்க தீப்பிடித்ததைப் போல் மலர்ந்திருந்த சங்கக் காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது நெய்தல் மலர்களால் நிறைந்திருக்கும் கேரளத்தின் மலரிக்கல்.
தேயிலைக் காடு: வால்பாறையின் தேயிலைத் தோட்டங்கள், கூழாங்கல் ஆறு, இரவு உலாவுடன் இருவாச்சிப் பறவைக்கான தேடலும் புதுமையான அனுபவத்தைத் தருகின்றன.
நம்ம சென்னை: சென்னையில் புது அடையாளங்களாக விளங்கும் அடையாறு சூழலியல் பூங்கா, காரல் மார்க்ஸ் சிலை, விக்டோரியா பொது அரங்கம் உள்ளிட்ட இடங்களின் அறிமுகம்.
பிரபலங்களின் சிறுகதைகள்
புனைவின் ருசி: கணவனைப் பிரிந்த மனைவி, கிராமத்து மாந்தர்களின் வெள்ளந்தித்தனம், பெண்ணின் மன உறுதி, முதுமைக் காலத்து நெகிழ்வு என மனித மனங்களின் உணர்வுக் கலவையைச் சிறுகதைகளாக வடித்திருக்கிறார்கள் கலாப்ரியா, சு.வேணுகோபால், பாவண்ணன், ஏக்நாத் நால்வரும்.
கவிதை
திரைப்படப் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, நோவா நதி உள்படப் பலரும் எழுதிய தேர்ந்தெடுத்த சொற்களும் சொல்லில் அடங்காத உணர்வுகளுமாக நம்மைச் சிந்தனையின் ஆழத்துக்கு அழைத்துச் செல்லும் கவிதைகள் இவை.
இலக்கியம்
கரிசல் எழுத்து: கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், பூமணி, பா.செயப்பிரகாசம் ஆகிய நான்கு கரிசல் எழுத்தாளுமைகளைக் குறித்த படைப்புச் சித்திரம்.
தமிழ் ‘ரீடர்’: ஒரு படைப்பாளியின் குறிப்பிட்ட சில படைப்புகளோடு அவரைப் பற்றிய அறிமுகச் சித்திரத்தை வழங்கும் ஆங்கில ‘ரீடர்’ பாணியில் தமிழில் வெளிவந்திருக்கும் படைப்புகளை அறிமுகப்படுத்துகிறது ‘அறிவுக்கொடைகளாகும் படைப்புலகங்கள்’ கட்டுரை.
எறும்புடன் ஒரு பயணம்: குழந்தைகளின் உலகம் கற்பனைகளால் நிறைந்தது. அந்தக் குதூகல உலகுக்கு குழந்தைகளோடு நம்மையும் அழைத்துச் செல்கிறது, ‘தாஜ்பூரில் இறங்கிய எறும்பு’ கதை.
வாழ்வு இனிது
தத்துவ தரிசனம்: வாழ்க்கையின் மாபெரும் தத்துவ தரினத்தைத் தருகின்றன குட்டி குட்டி ஜென் கதைகள்.
வரலாற்றுத் தேடல்: அன்றாட வாழ்க்கையின் பரபரப்பில் நான் கவனிக்க மறந்துவிடுகிற நம்மைச் சுற்றி இருக்கிற வரலாற்று அடையாளங்களான உயிர் காலேஜ், செத்த காலேஜ் பற்றி விளக்குகிறது சென்னை அருங்காட்சியகம் குறித்த கட்டுரை.
அன்பின் அறிவியல்: மனிதர்கள் மட்டுமல்ல; இந்த உலகில் இருக்கும் பூஞ்சைகள், பெருமரங்கள், விலங்கினங்கள் என உயிர்கள் அனைத்துமே அன்பென்ற அரும்பண்பைப் பெற்றிருப்பதை அறிவியல் துணையோடு விளக்குகிறது நன்மாறன் திருநாவுக்கரசுவின் அறிவியல் கட்டுரை.
விருந்து
தலைவாழை: மைசூர் பாக், மராத்திய பேடா, லட்டு, பூந்தி எனப் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் நுழைந்து நம் பண்டிகையோடு கலந்துவிட்ட இனிப்பு வகைகளின் ருசிகரப் பயணம்.
ஆண்கள் மட்டும்: சமூக வலைத்தளங்களைத் தங்கள் கைப்பக்குவத்தால் கட்டிப்போட்டு வைத்திருக்கும் ஆண் சமையல் கலைஞர்கள் ஐந்து பேரின் தீபாவளி விருந்து!
அத்தோ, பேஜோ போன்ற பர்மா உணவு வகைகள், அட்லாப்பம், மக்மல் பூரி உள்ளிட்ட வடசென்னையின் வித்தியாச உணவு வகைகள் குறித்த அறிமுகம்.
ஒளிஓவியங்கள்
பனங்காட்டு வீச்சம்: சாயல்குடியில் உள்ள பனையேறிகளின் விடியல், பகற்பொழுது, இரவு என முப்பொழுதும் ஒளிப்பட வடிவில் பனையேறிகளின் வாழ்க்கையை அறிய முடிகிறது.
இன்ஸ்டகிராமில் கலக்கும் ஐ.டி. இளைஞர் எடுத்த அட்டகாசமான ஒளிப்படங்களின் தொகுப்பு.
தொல்லியல் பெருமையை நிலைநாட்டிய கீழடி குறித்த பெண் ஓவியரின் தனித்துவ ஓவியங்களின் வித்தியாசமான தொகுப்பு.
தமிழ்ப் படங்களில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்தால்... 90களின் படத்தில் 60களின் நடிகர்கள் தோன்றினால்... ஏ.ஐ. உதவியோடு ஓர் ஓவிய உலா.
