பள்ளியிலும் கல்லூரியிலும் சிறப்பாகப் படித்து நல்ல மதிப்பெண்களைக் குவிக்கும் மாணவர்கள் அனைவராலும் நல்ல வேலைவாய்ப்பைப் பெற முடிவதில்லை. இதற்கு பல காரணங்கள் இருப்பினும் 21-ம் நூற்றாண்டு திறன்கள் குறித்த புரிதல் இன்னமும் பரவலாகாதது முக்கிய காரணமாக அறியப்படுகிறது. இந்த நூற்றாண்டுக்கென புதிதாக மனிதக்குலத்துக்கு ஆற்றல்கள் தேவைப்படுகிறதா என்றால் நிச்சயம் ஆமாம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இது தொழிற்புரட்சி 4.0 காலம் என்றழைக்கப்படுகிறது. 19-ம் நூற்றாண்டில் தோன்றிய தொழிற்புரட்சியினால் பலவிதமான இயந்திரங்களுடன் மனிதர்கள் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்படுத்தியது. அதுவே தொழிற்புரட்சி 4.0 காலமானது இயந்திர மனிதர்களான ரோப்போகளுடனும் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மனிதர்களுடனும் கைகோர்த்து பணியாற்றும் அவசியத்தை உண்டுபண்ணியிருக்கிறது. இங்கு தொழில்நுட்ப திறன்களுக்கு இணையாக முன்பு எப்போதும் இல்லாததைவிடவும் கூடுதலாக மனவியல் திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.